Archive for December 2017கலாச்சாரத்தைப் பேணிக்காப்பதில் கலைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கலாச்சாரம் அழியாது இருந்தால் மட்டுமே ஓர் இனம் வாழ முடியும். ஓர் இனத்துக்கான அடையாளங்கள் இல்லாது போகும் போது அவ்வினம் தனது தன்மை அற்றதாகிவிடும். நாம் தமிழ் இனம் என்று தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின், தமிழ் பேசுவது மட்டுமன்றி நமது நடை, உடை, பாவனை, உணவு முறை, வழிபாட்டு முறை, கலை, கலாச்சாரம், பண்பாடு, பண்டிகைகள் எனப்பல அம்சங்கள் உண்டு. இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. எனவே எமது இனத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் இளம் தலைமுறையினர் தொடக்கம் முதியோர், மதகுருககள், ஆசிரியர்கள், கலைஞர்கள் என அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே பயன் உண்டு.

ஆசிரியர்கள், கலைஞர்கள் என்ற பங்களிப்பை சமூகத்திற்கு வழங்குவதில் கடந்த 22 ஆண்டுகளாக தனது கடமையை மிகச் செம்மையாக வழங்கி வந்துள்ளது கலைமன்றம். 1993ம் ஆண்டு திரு. சந்ரு, ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்ரு அவர்களால் கனடாவில் ஸ்தாபிக்கப்பட்டது “கலைமன்றம்“ எனப்படும் நடன, இசை மற்றும் யோகாசனாக் கல்லூரி.

இக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை தனது மாணவர்களின் வளர்ச்சி குறித்துப் பல திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே வருவதை அவதானிக்க முடிகின்றது. ஸ்தாபிக்கப்பட்ட அதே ஆண்டின் நடுப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தனது ஆண்டு விழாவினை கனடாவில் மாபெரும் அரங்கொன்றில் சிறப்பாக நடத்தியது. தனது துரிதமானதும், திடமானதுமான வளர்ச்சியினைப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.

அடுத்த இரு ஆண்டுகளில் நேர்த்தியான ஓர் பாடத்திட்டத்தினை உருவாக்கி முதன் முதலில் கடனாவில் நடனத்திற்கான பரீட்சையினை ஆரம்பித்த பெருமை இக்கல்லூரியினையும் அதன் அதிபர் ஸ்ரீமதி நிறைஞ்சன சந்ருவினையுமே சாரும்.

1995ம் ஆண்டு தொடக்கம் முதல் இன்றுவரை 100க்கும் மேற்பட்ட மாணவர்களை அரங்கேற்றம் செய்துள்ளதும், பல சிறந்த உள்ளூர், வெளியூர் கலைஞர்களை முதன்முதலில் கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டதும் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்ரு அவர்களால் என்பதும் பலராலும் மறுக்கப்பட்டாத உண்மை.

2014 ஆம் ஆண்டு நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவின் புகைபடத் தொகுப்பு ( இதில் அழுத்தவும் )

மேலும் பரீட்சையை மட்டும் நடத்தி சான்றிதழ்களை வழங்குவது மட்டுமன்றி, பரீட்சையில் இறுதி ஆண்டினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பல அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் முன்னிலையில் பிரமாண்டமான பட்டமளிப்பு விழாவினை நடத்தி, ஆசிரியர்தராதரப்பத்திரமும், பரீட்சையை நிறைவு செய்ததோடு, அரங்கேற்றத்தினையும் முடித்துள்ள மாணவர்களுக்கு “நிருத்த நிறைஞர்“ பட்டத்தினையும் தங்கப்பதக்கத்தினையும் வழங்கி கலை உலகிற்கு ஒவ்வொரு ஆண்டும் பல ஆசிரியர்களையும், திறமையான கலைஞர்களையும் பிரசவித்துக் கொண்டு இருக்கின்றது.

நிறைஞ்சனா சந்ருவின் மாணவர்களின் திறமைக்கண்டு கனடாவில் உள்ள பெரும் நடனக் கம்பெனிகள் தமது நிகழ்ச்சிகளுக்கு கலைமன்ற மாணவர்களை உபயோகித்துக் கொள்வது தக்க சான்றாக அமைகின்றது.

இதன் மூலம் பல மாணவர்களுக்கு வேறுநாடுகள் சென்று நடன நிகழ்ச்சிகள் நடத்தும் சந்தர்ப்பத்தையும், அனுபவத்தையும் வழங்கி வருகின்றார் நிறைஞ்சனா சந்ரு.

அத்தோடு நின்று விடாது கலைமன்றத்தின் பட்டதாரிகளுக்கான சங்கம் ஒன்றினை அமைத்து ஒவ்வொரு ஆண்டும் நடன நிகழ்வினை வழங்கி வருவதோடு தம்மால் இயன்ற நிதி உதவியினையும் இந்நிகழ்ச்சிகள் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவும் தனது மாணவர்களை வழிநாடத்தி வருவது பெரும்பணியாகும். இந்நிகழ்வுகள் கல்லூரியின் பட்டதாரி மாணவர்களின் கூட்டு முயற்சியினால் மட்டுமே உருவாக்கப்பட்டு வழங்கப்படுவது மாணவர்களின் தனித்து இயங்கும் ஆற்றலையும் கண்டு வியக்க வைக்கின்றது.

2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் St Louis இல் நடைபெற்ற FeTNA நிகழ்வில் எல்லோராலும் பாராட்டைப் பெற்ற மாபெரும் நாட்டிய நாடகம்

9 ஆம் ஆண்டு தொடக்கம் 12ஆம் ஆண்டுவரை கற்கும் மாணவர்களுக்கு நடனத்திற்கான ‘கிரெடிட்டை“ (Credit) வழங்குவதோடு சமூக நிகழ்வுகளில் தொண்டுபுரியும் மாணவர்களுக்கு அதற்கான சேவைச்சான்றிதழையும் வழங்குவதால் பாடசாலையில் மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கு பெரும் பயன் உள்ளதாக அமைவது குறிப்பிடத்தக்கது.

22 ஆண்டுகளில் 3 – 4 வயது கனடியக் குழந்தைகளுக்கு நடனம் கற்பித்து, பட்டதாரிகளாக்கி, ஆசிரியர்களாக்கி அவர்களின் மாணவர்களையும் பரீட்சையில் பங்கேற்க வைத்துளளதோடு 3வது தலைமுறையினரைக் கலைஞர்களாகப் பார்க்கும் பெருமைக்குரியவர் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்ரு என்று கூறலாம்.

தனது தோட்டத்தில் பூத்த மலர்கள் என்றுமே வாடாது இருக்க வரமளித்த இறைவனுக்கு நன்றி கூறுகின்றார்.

மேலும், இவ்வாண்டு அவரின் வாரிசான குமாரி ஐஸ்வரியா சந்ருவினால் இசை வயலின் வகுப்புகளை எதிர்வரும் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை “வைகாசி விசாக“ தினத்தன்று தொடங்கப்பட உள்ளது. ஐஸ்வரியா சந்ரு பற்றி கனடிய மக்களுக்கு நாம் கூறத்தேவையில்லை. இவர் தனது 3 வயதில் இருந்து பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துக் கொண்டவர். இசை, வயலின், நடனம் என்பவற்றை முறையாகக் கற்றுக் தேறி பல பட்டங்கள், விருதுகளைத் தனதாக்கியவர். பல மேடைகளில் பாடி, ஆடி, நடித்தும், பல நிகழ்ச்சிகளை தயாரித்தும் வழங்கியது மட்டுமன்றி பல நாடுகள் சென்று நிகழ்ச்சிகள் வழங்கிய பெருமைக்கும் உரியவர். அவniranchana-2ரின் அனுபவத்தினையும், புதிய அணுகுமுறையினையும், அவரின் கற்பித்தல் மூலம் நடனத்தில் நிரூபித்தவர். தற்போது பல பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்கி இசை, வயலின் ஆகிய இரு பாடங்களையும் கலைமன்றத்தில் ஆரம்பிக்கின்றார்.

கலை மன்றத்தின் குரு ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்ருவினதும், அவருடன் இணைந்து பணியாற்றும் குமாரி ஐஸ்வரியா சந்ருவினதும்,மேலும் அங்கு பணியாற்றும அனைத்து ஆசிரியர்களினதும் கலைப்பணிகள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

இகுருவிக்காக ராம்

Read More

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?? என்று பெண்களை இழிவு படுத்தி இருட்டடிப்புச் செய்த காலத்தில் பெண்களுக்கான மூலாதாரமாக முதன்மைப்பாடசாலையாக பிரித்தானியரால் 1834 அளவில் நிறுவப்பட்டதுதான் வேம்படி மகளிர் கல்லூரி. ‘கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி காட்சி கெடுத்திட லாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிடும் காணீர்”என்கின்ற பெரும் புத்துணர்விற்கு பெண்களை இட்டுச் சென்றது இக்கல்லூரியின் தோற்றம். அதி வணக்கத்திற்குரிய குருமார்கள் பீற்றர் பார்ச்சிவல், ஜேம்சு லிஞ்ச்,தோமஸ் ஸ்குவான்சு ஆகியோரின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்ட வேம்படி மகளிர் கல்லூரியானது ஈழத்து தமிழ் மாதர்களின் கல்வியை, அறிவை, கலாச்சாரத்தை,வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்பி நிற்கின்ற மாபெரும் கலைக் கோவிலாகும். யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசியப் பாடசாலையாக இன்று மிளிர்கின்றது. . இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் சாதனையாக யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் 26 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர் என்கின்றது கல்வித் திணைக்களத்தின் புள்ளி விபரம் . இத்தகு வரலாற்றுப் புராதனமும்,பெருமையுமிக்க வேம்படி மகளிர் கல்லூரியில் கவின் கலைகளை வளர்ப்பதற்கான அரும் பெரும் முயற்சிக்கான அடித்தளமாக டொரோண்டோவில் பிறந்து வளர்ந்து நாட்டியக்கலையில் சாதனை படைத்து நிற்கும் செல்வி ஐஸ்வர்யா சந்துரு அவர்கள் நாட்டிய தர்ப்பணம் எனும் அற்புத நிகழ்வை 16 ந்திகதி ஜூலை அன்று நடாத்தி எம்மை எல்லாம் அதிர வைத்தார். மண்டபம் நிறைந்த மக்கள் சூழ அவரின் அற்புதமான நாட்டிய தர்ப்பணம் கலை மன்றம் ஆதரவில் “தோர்ன்கில்” நகர கவின் கலைப் பெருஅரங்கில் வெற்றிகரமாக நடந்தேறியது. நடனம் என்பது அழகுற ஆடுதல் என அர்த்தம் கொள்வர். அது நூற்றெட்டு உடற் கரணங்களோடும், கை, கால், கண், வாய் முதலிய உறுப்புகளின் செயற்பாட்டோடும் கூடியது பாவம், இராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்தே “பரதம்’ பிறந்தது.. நாட்டியம், நிருத்தம், நிருத்தியம் என்று மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது பரதம். பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம், நந்திகேஸ்வரரின் அபிநய தர்ப்பணம் போன்ற வடமொழிப் பனுவல்கள் பரத நாட்டிய நுட்பங்களை விதந்துரைப்பவை. ஆனாலும் கால மாற்றம் பல பரிணாம வளர்ச்சிகளை பரதத்தில் ஏற்படுத்திப் புதுமையை உள்வாங்கியுள்ளது. இதற்கு முதன் முதலில் வித்திட்ட பெருமை நாட்டிய கலாகேசரி வழுவூர் இராமையாபிள்ளை அவர்களையே சாரும். யாவரும் இரசிக்கத் தக்கதாய் புதிய வகைப்பதங்களை உருவாக்கிய மகா கலைஞன் அவர். அவரின் வழிவந்த ஆடற்கலையை டொரொன்றோவில் அற்புதமாகக் கற்பித்துக் கொடுப்பது கலைமன்றம் நாட்டிய அகாடமி.

“ஆடற்கலை மனிதனுடன் தோன்றியது. அது அழியப்போவதொன்றல்ல.சமுதாய நிலைக்கேற்ப வளைந்து கொடுத்துப் பரிணமித்துக் கொண்டு செல்வதை எவரும் தடுத்து நிறுத்தமுடியாது”. என்பதை எப்போதும் வலியுறுத்தும் குருவாகவிளங்குபவர் கலைமன்றத்தின் அதிபர் நாட்டிய தாரகை திருமதி நிரஞ்சனா சந்துரு அவர்கள். அவரின் அருமை மகளே ஐஸ்வர்யா அவர்கள். இளமையிலேயே நாட்டியத்தை கற்ற அவர் கர்நாடக சங்கீதம் பாடுவதிலும் மிக வல்லவர். யோர்க் பல்கலைக்கழகத்தில் நாட்டியக்கலைப்பிரிவில் தன்கற்கை நெறியைத் தொடரும் ஐஸ்வர்யா முதன்முதலாய் கனேடிய மேடைகளில் தானே பாடிய படி பரதநாட்டியத்தை ஆடுகின்ற அற்புதத்தை நிகழ்த்தியவர். இந்நிகழ்விலும் அவர் அவ்வாறு பாடி ஆடி பார்வையாளர்களை அசத்தினார். நிகழ்வில் பங்கேற்ற பக்கவாத்தியங்களான மிருதங்கம்,வயலின்,புல்லாங்குழல் கலைஞர்கள் யாவருமே இங்கிலாந்திலிருந்து வந்து இந்நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள். பரதநாட்டிய நுட்பங்கள் அறிந்த சுதர்சன் அவர்கள் அறிவிப்பாளராக இருந்தமை மேலும் இந்த நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்தது. கனடாவின் முன்னணிப் பாடகி “சாய்ப்பிருந்தா” அவர்களின் கணீரென்ற குரலும் அவரின் தேர்ந்த கர்நாடக சங்கீத ஞானமும் அவரோடு இணைந்து பாடிய இளம் பாடகி அபிநயா அவர்களின் இனிய குரலும் கலையரங்கத்தை மேலும் மெருகு படுத்தின கனடாவின் முக்கிய ஊடகங்கள் இந்தச் சிறப்பு நிகழ்விற்கு ஆதரவு நல்கியிருந்தார்கள். புலம் பெயர்ந்தாலும் தாயக மண்ணை மறக்காமல் அதன் வளர்ச்சிக்கு இளம் கலைஞர்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் நல்ல உதாரணம் என அந்த நிகழ்வில் பேசிய விருந்தினர்கள் பெருமையோடு குறிப்பிட்டார்கள்.

வழிகாட்டுதலும், நெறிப்படுத்தும் தன்மையும், நேர்மைத் தன்மையும் இருக்குமாயின் எவரையும் உயர்ந்தவராக்கி விட முடியும். இந்த வகையில் ஐஸ்வர்யாவின் இந்த முயற்சி வேம்படி மகளிர் உயர் கல்லூரியின் நுண்கலைத்துறையை நிச்சயம் மேம்படுத்தும் என்று நம்பலாம் என்று கருத்து தெரிவித்தார் வேம்படி பழைய மாணவியும் சமூக ஆர்வலருமான திருமதி ஜெயஸ்ரீ கணபதிப்பிள்ளை அவர்கள்.

இந்த உலகம் ஒரு ஓட்டப்பந்தய மைதானம். அதில் வேகமாக ஓடுபவர்களே வெற்றியையும், புகழையும் அடைகிறார்கள். அப்படிப்பட்ட வெற்றியைப் பெற பல மாணவிகள் தயாராயிருக்கின்றார்கள் , தன்னம்பிக்கைகொண்டிருக்கின்றார்கள் அற்புதமான திறமைகளோடு இருக்கின்றார்கள் ஆனாலும் பொருளாதார நெருக்கடியால் பல மாணவிகளின் அத்தனை கனவுகளும் சிதைந்து பலவேளைகளில் சின்னாபின்னமாகிப் போகின்றது. வாழ்வு திசைமாறிப்போயிருக்கின்றது. இத்தகைய மாணவிகளை மனதில் கொண்டு அவர்களின் அவலநிலை போக்கி வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளுக்காக அருகி வரும் நுண் கலையை ஊக்குவிக்க நிதி சேகரித்து வழங்க முனைந்திருக்கும் “கலைமன்றம்” மிகவும் பாராட்டிற்குரியது. வேம்படி மகளிர் கல்லூரியின் கவின் கலைகள் வளர்ச்சி நிதிக்காக தன்னார்வமாக இந்த நிகழ்வை திறம் பட நடத்தி முடித்திருக்கின்றது கலைமன்றம் அகாடமி. எம்மண்ணையும், எம் மண்ணின் புனிதத்தையும் காப்பாற்ற ஐஸ்வர்யா போன்ற ஆயிரமாயிரம் கலைகளில் கீர்த்தி பெற்ற இளையவர்கள் கனடாவில் இருக்கின்றார்கள். அவர்களை சமூகமும் பெற்றோர்களும் ஊக்குவிக்கவேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்கான சுவடுகளை ஏற்படுத்தி சக மானிடரையும் தன்னைப் போல் வாழவைக்கத் துடிக்கின்ற இளம் நர்த்தகி “ஐஸ்வர்யா” அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்

Wednesday, 20 July 2016 22:38 – மா.சித்திவிநாயகம் –

பதிவுகள் (PATHIVUKAL- ONLINE TAMIL MAGAZINE)

Read More